உலகக் கோப்பையில் முதல் இரட்டை சதம்; மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்ற ஆஸ்திரேலியா

ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் இப்ராகிம் சத்ரான் 143 பந்துகளில் 129 ரன்கள் என அசத்தலாக ரன் குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷாகிதி 26 ரன்களும், அஸ்மதுல்லாஹ் 22 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ரஷித் கான் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விளையாடினர். பேட்டிங்கில் கலக்கிய ஆப்கானிஸ்தான் அணி, பந்துவீச்சிலும் ஆஸ்திரேலியாவைக் கலங்கடித்தது. 4 ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணி பின்னர் கணிசமான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த வகையில் 91 ரன்களுக்குள் முக்கியமான 7 பேரை இழந்ததால் ஆஸ்திரேலியா இனி அவ்வளவுதான் என பலரும் நினைத்தனர். ஆனால் அதன் பின்னர் நடந்த கதையே வேறு. இந்தப் போட்டியைப் பார்க்காதவர்கள், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த ஒரு போட்டியைக் காணத் தவறியவர்கள் என்றே சொல்லலாம். அதற்குக் காரணம் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்.
கிட்டத்தட்ட தோற்றுப்போன அணியை தனி ஒரு ஆளாக நின்று தனது அதிரடி ஆட்டத்தால் வென்று காட்டினார். பந்துகளை எட்டுத் திக்கும் பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தானின் வெற்றிக் கனவை சுக்கு நூறாக சிதறடித்தார். காயம் ஏற்பட்டு உடலைக்கூட பெரிதாக அசைக்க முடியாத நிலையில் இருந்த மேக்ஸ்வெல் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது தேர்ந்த அனுபவத்தால் பந்துகளை பவுண்டரிகளாக மடைமாற்றி ரவுண்ட் கட்டி ஆடினார்.
அவருக்குப் பக்க பலமாக கேப்டன் கம்மின்ஸ் நிலையாக களத்தில் நிற்க 47ஆவது ஓவரிலேயே ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வென்றது. மேக்ஸ்வெல், ஆட்டமிழக்காமல் 128 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் என 201 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்தார். மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்தது மட்டுமல்லாமல், மேக்ஸ்வெல்- கம்மின்ஸ் ஜோடி பார்ட்னர்ஷிப்பிலும் இரட்டை சதம் அடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறி உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.