நியூ யார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை திருவிழா 2026, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி குயின்சில் உள்ள ஜேம்ஸ் அம்ரோஸ் பள்ளி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. “முத்தமிழ் – இயல், இசை, நாடகம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டின் விழா நடத்தப்பட்டு, தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தியது. நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு விருந்தினர்களுக்கான மதிய உணவுடன் தொடங்கியது. தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தமிழ்ப் பள்ளி மாணவர்களின் உற்சாகமான நடன நிகழ்ச்சிகளும், பெரியவர்களின் கலைநிகழ்ச்சிகளும் விழாவிற்கு சிறப்பூட்டின. ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றதால், சில பெரியவர்கள் கிறிஸ்தவ பக்திப் பாடல்களை இனிமையாகப் பாடினர். அந்த பக்தி பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரிடமும் அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வுகளை ஏற்படுத்தி, விழாவை ஆன்மிக நெகிழ்ச்சியுடன் மாற்றின.
விழாவின் முதல் முக்கிய நிகழ்ச்சியாக அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் பற்றிய நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. நியூ ஜெர்சியைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழ் கலைஞர்கள் வழங்கிய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததுடன், நிறைவில் எழுந்து நின்று கைதட்டும் பாராட்டையும் பெற்றது.அதனைத் தொடர்ந்து இசை நிகழ்வாக “குறளிசைக் காவியம்” நடைபெற்றது. இதில் இளம் இசைக்கலைஞர் லிடியான் நாதஸ்வரம் தனது திருக்குறள் காணொளித் தொகுப்பை வெளியிட்டார். லிடியனும் அவரது சகோதரி அமிர்த வர்ஷினியும் பல்வேறு நாடுகளில் இந்தத் தொகுப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களின் 9வது தொகுப்பு வெளியீட்டை நியூ யார்க் தமிழ்ச் சங்கம் நடத்தி வைத்தது பெருமைக்குரிய தருணமாக அமைந்தது. மேலும், “குறளிசைக் காவியம்” நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்களுக்கு லிடியனின் குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து முத்துக்குமரன் “பெருமைமிகு தமிழ் நாகரிகப் பாரம்பரியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த அவரது பேச்சை ரசிகர்கள் ஆர்வமுடன் ரசித்தனர். பின்னர் நடைபெற்ற சிறப்பான இரவு உணவுக்குப் பிறகு, “நியூ யார்க் வாழ்வில் தமிழ்ப் பண்பாட்டைத் தொடர்வது சாத்தியமா?” என்ற தலைப்பில் முத்துக்குமரன் கலந்து கொண்ட “விவாத மேடை” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். பல இனிமையான கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்வுகள் மற்றும் தமிழ் பண்பாட்டின் சிறப்புகளை எடுத்துக்காட்டிய நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த சித்திரை திருவிழா, கலந்து கொண்ட அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.

