இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி, Instagram, YouTube, X (முன்னாள் Twitter) போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களை பார்க்கவும், கண்காணிக்கவும் மட்டுமே ராணுவத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் கீழ், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் எந்தவிதமான பதிவுகளையும் வெளியிடக் கூடாது, அதேபோல் லைக், கமெண்ட், ஷேர் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள், படை நகர்வு, பயிற்சி விவரங்கள், ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட அதிகாரபூர்வ அல்லது உள்துறை தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதைத் தடுப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும்.சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம், எதிரி நாடுகள் அல்லது தீவிரவாத அமைப்புகள் அந்த தகவல்களை தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதையும் ராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் கசிவு, தவறான தகவல் பரவல், சைபர் உளவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், இந்த கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் இருந்தாலும் கூட, ராணுவத்துடன் தொடர்புடைய எந்த விஷயங்களையும் பதிவிடக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை, துறைசார் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களை பாதுகாப்பதற்காக, காலத்திற்கேற்ப விதிமுறைகள் புதுப்பிக்கப்படுவதாகவும், இந்த கட்டுப்பாடுகள் ராணுவத்தின் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

