ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2028-29-ஆம் ஆண்டுக்கான தற்காலிக உறுப்பினராக தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ள இந்த தேர்தலில் ஆசிய-பசிபிக் குழு பிரிவில், ஒரு தற்காலிக உறுப்பினர் இடத்துக்கு இந்தியா போட்டியிட உள்ளது. அதே நேரம் தஜிகிஸ்தான் நாடும் அந்த இடத்துக்கு போட்டியிடுகிறது.
இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராகும் தேர்தலுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பிரசாரத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த பிரசாரத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தலில் தேர்வு செய்யப்பட்டால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா 2 ஆண்டுகள் தற்காலிக உறுப்பினராக இருக்கும். முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, கடந்த 2021-22-ஆம் ஆண்டில் தற்காலிக உறுப்பினராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

