தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு மற்றும் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய உரிமைகள் தொடர்பான விவகாரங்கள், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநிலங்களின் அச்சங்கள் மற்றும் அது சார்ந்த நிலைப்பாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான நிலுவையில் உள்ள நதிநீர்த் தகராறுகள் மற்றும் மேலாண்மைப் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் விஜய், சந்திரபாபு நாயுடு, சிவகுமார், சதீசன், ரேவந்த் ரெட்டி மற்றும் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாநாட்டிற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்
சென்னை விமான நிலையம் வந்தடிந்தார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து அமித்ஷா சாலை மார்க்கமாக கோவளம் சென்றடைந்தார். இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கோவளம் சென்றடைந்தார். முன்னதாக மாநாட்டில் 7 மணி அளவில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தமிழகம் வந்தடைந்தார்.

