தக்காளி விலை உச்சம் தொட்ட நிலையில், கர்நாடகாவில் லாரியை கடத்திச் சென்று இரண்டரை டன் எடைக்கொண்ட தக்காளிகளை வேலூரைச் சேர்ந்த இளம் தம்பதி விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விறுவிறுப்பும், திரில்லிங்கும் நிறைந்த இந்த காட்சிக்கு சற்றும் குறையாத வகையில், கர்நாடகாவில் லாரி ஹைஜாக் அரங்கேறி உள்ளது. கட்டாயம் அது விலையர்ந்த பொருளாக தான் இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது சரிதான். அதில் இருந்தது, சுமார் இரண்டரை டன் எடை கொண்ட தக்காளிகள்.
தக்காளியை தோட்டத்துக்குள் புகுந்து திருடுவது, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடுவது, அண்ணாமலை, படையப்பா உள்ளிட்ட பட பாணிகளில் ஒரே பாட்டில் தக்காளி வியாபாரி கோடீஸ்வரர் ஆவதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடம், கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா கடந்த 8 ஆம் தேதி ஹிரியூர் நகரில் இருந்து கோலார் சந்தைக்கு, சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை டன் தக்காளிகளுடன் லாரியில் விவசாயி மல்லேஷ் சென்றுள்ளார். அந்த லாரியை காரில் பின்தொடர்ந்து வந்தவர்கள், லாரிக்கு முன்னால் சென்று திடீரென பிரேக் அடித்துள்ளனர்.
இதனால், பின்னால் வந்த தக்காளி லாரி அவர்களது வாகனத்தில் மோதி உள்ளது. உடனே, தக்காளி வியாபாரி மல்லேஷை மிரட்டி கூகுள் பே மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை பறித்துள்ளது அந்த கும்பல். பின்னர், லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு தக்காளி லாரியையும் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து விவசாயி கொடுத்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினர்.
டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விசாரித்ததில், கடத்திய லாரியை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு கொண்டு வந்து தக்காளி அனைத்தையும் கடத்தல்காரர்கள் விற்றது தெரியவந்துள்ளது.
அதே வேகத்தில் திரும்பிய அவர்கள், பெங்களூரு எல்லையிலேயே லாரியை விட்டுவிட்டு நம்பர் பிளேட் இல்லாத மற்றொரு வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தமிழ்நாடு போலீசார் உதவியுடன் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், தக்காளி கொள்ளையில் ஈடுபட்டது வேலூரைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவி சிந்துஜா என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
தக்காளி திருடர்கள் மீது ஐபிசி 346A, 392 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் பிரியாணி கடைகள் அதிகம் இருப்பதால், அந்த ஓட்டல்களுக்கு தக்காளி விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.