நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் திமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாக அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் திமுக நிர்வாகிகள் நிறைவேற்றித் தந்திருப்பதாக தெரிவித்துள்ளார். வருகிற 26ஆம் தேதி திருச்சியில் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறவுள்ளவுள்ளதாகவும், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, இறந்துவிட்ட வாக்காளர்கள், தேர்தல் நாளன்று திடீரென ‘உயிர்த்தெழுந்து’ வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானது என கூறியுள்ளார்.
முந்தைய பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில், திமுக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்களை அதிகளவில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ள அவர், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எனப் பேசி பேசி வளர்ந்த திமுக இயக்கம், எதிர்வரும் காலம் டிஜிட்டல் காலம் என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.