இயக்குநர், நடிகர் எதிர்நீச்சல் சீரியலில் புகழ்பெற்ற ஆதி குணசேகரன் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம்; தமிழ் சின்னத்திரை உலகம் அதிர்ச்சி

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக வலம் வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று மரணம் அடைந்தார் அவரின் திரை பயணம் குறித்து பார்க்கலாம்.
பெரிய திரை சின்னத்திரை என இரண்டு திரைகளிலும் தனக்கென தனி அடையாளத்தை நடிப்பில் உருவாகிக் கொண்டவர் மாரிமுத்து இவர் தேனி மாவட்டம் வருசநாடு ஊராட்சியில் உள்ள பசுமலை கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்தார்.
இவருக்கு நான்கு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் உள்ளனர் இளம் வயதில் பாலிடெக்னிக் படிக்கும் பொழுது அவருடைய நண்பர்கள் இவரை சினிமாவில் நடிக்க கூறியுள்ளனர் அப்போது ஏற்பட்ட சினிமா ஆசையின் காரணமாக 1987 ஆம் ஆண்டு மாரிமுத்துவும் அவரின் சகோதரரும் சென்னைக்கு வந்தனர்.
சென்னை வந்தபின் மாரிமுத்து பாடல் ஆசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு அரண்மனை கிளி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக வேலைசெய்தார்.
இந்த படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் வசந்திடம் ஆசை திரைப்படத்தின் அசோசியேட் இயக்குனராக சேர்ந்து அதன் பிறகு அவருடன் நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.
பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றி வந்த மாரிமுத்து அஜித் நடித்த வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் பணியாற்றினார். அந்தப் படத்தில் முதன் முறையாக சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். வாலியை போல விஜய் நடித்த உதயா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்தார்.
மாரிமுத்துவின் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் நடிகராக அவர் மிகப்பெரிய அளவில் உயர்ந்தார். அதற்கு மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்த யுத்தம் செய் படம் மிகவும் உதவியது. அதில் இவர் நடித்த காட்சி ரசிகர்களிடம் அவரை அடையாளப்படுத்தியது.
இதன் பின் நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் வரும் இவரின் காட்சிகளை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். கமலின் இந்தியன் – 2 படத்திலும் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் பெரும் வெற்றியடைந்த இவர் சின்னத்திரையிலும் தயங்காமல் நடித்தார். எதிர்நீச்சல் என்ற தொடரில் வரும் இவரின் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம். குறிப்பாக அவர் செய்யும் நக்கல்கள் இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி இடைவிடாமல் நடித்துவந்த மாரிமுத்து சென்னை ராமாபுரம் அருகே மணப்பாக்கம் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்தார். அடுத்த மாதம் அந்த வீட்டிற்கு குடியேறும் வகையில் வேலைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் மாரிமுத்து மாரடைப்பால் காலாமானார். இவர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 மற்றும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.