பிக் பாஸ் நிகழ்ச்சியியல் இருந்து தான் விலகுவதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் பதிப்பை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமல்ஹாசன் இப்போது அதிலிருந்து சிறிது காலம் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் அந்த முதல் சீசன் தொடங்கியது. தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக, 7 சீசன்களாக மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது பிக் பாஸ்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக அமைந்தது, அதை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் சுமார் 7 ஆண்டுகள் கழித்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்…. “இதற்கு முன்னதாகவே நான் ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன். ஆகவே எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”
“இந்திய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மிகவும் அசத்தலான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் தமிழ். அதில் நான் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.