இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மற்றும் நடிகர் மனோஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை பெற்ற நிலையில், சேத்துப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) உயிரிழந்தார். மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மனோஜின் உடலை, பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். மின்மயானத்தில், அவரது இரு மகள்கள் இறுதிச் சடங்குகளை நடத்திய பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மகனின் இழப்பால் மனமுடைந்து வாடிய பாரதிராஜாவை அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இறுதிச்சடங்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாக்கியராஜ், வைரமுத்து, இளவரசு, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், மிஷ்கின் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செய்தனர்.

