ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் தேசிய பூங்காவிற்கு செல்ல தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவு

அரசியல் ஆப்கானிஸ்தான் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் தேசிய பூங்காவிற்கு செல்ல தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அறிவிப்புக்கு மாறாக அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது.
இந்த சூழலில் தாலிபான் அரசின் கல்வித் துறை, 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதி இல்லை என சில மாகாணங்களில் உத்தரவிடப்பட்டது. 10 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பவும் அவர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல தடை உள்ளது. ஆண் துணையின்றி பெண்கள் வெளியில் செல்ல தடை, பொதுக் கழிப்பிடங்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு போன்ற தடைகளும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் பெண்கள் உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையங்கள், காட்சிக் கூடங்கள் செல்ல தாலிபான் தடை விதித்துள்ளது. பெண்களின் சுதந்திரத்துக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தாலிபான்கள் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணமே உள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டில் பேண்ட்-இ-அமிர் என்று அழைக்கப்படும் தேசிய பூங்காவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணியும் சரியான முறையைக் கடைப்பிடிக்கவில்லை என்ற காரணத்தால் ​​சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் இந்த தேசிய பூங்காவிற்கு பெண்கள் செல்வதை தடுக்குமாறு பாதுகாப்புப் படைக்கு உத்தரவிட்டுள்ளது ஆப்கான் அரசு.
பாமியன் நகரில் அமைந்துள்ள பாண்ட்-இ-அமிர் ஒரு முக்கிய சுற்றுலா தளமாகும். இது 2009-ம் ஆண்டு ஆப்கான் நாட்டின் முதல் தேசிய பூங்காவாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *