வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்; உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா களைகட்ட தொடங்கியது

இந்தியா உலகம் கலை / கலாச்சாரம் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றானதும், கீழ்திசைநாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையை பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் அருகில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது. நடுத்திட்டு கோவிலுக்கு எதிர்புறம் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. பேராலயத்தை சுற்றி செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் அமைந்துள்ள சேவியர் திடலில் இன்று (24ம் தேதி) இரவு 10 மணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். இதைதொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் அனைவரிடமும் காண்பிப்பார். தொடர்ந்து நாளை (25ம் தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் நாகை எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *