கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
பவானி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்வதே அத்திக்கடவு – அவிநாசி திட்டமாகும். இந்த திட்டம் 65 ஆண்டுகளுக்கும் மேலாக கனவாக இருந்து வந்தது. இந்நிலையில், ஆயிரத்து 916 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அத்திக்கடவு – அவினாசி திட்டம் மூலம், 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வறட்சி காலங்களில் குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன், 24 ஆயிரத்து 468 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தலைமுறைகளின் கனவுத்திட்டம் நிறைவேறியதால், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின்படி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 32 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர் நிலைகளில் நீர் நிரப்பப்படும். இதற்காக பவானி, நல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1998-ஆம் ஆண்டில் 134 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட இந்த திட்டம் தற்போது 1916 கோடி ரூபாயில் நிறைவடைந்தது.
