12 சதவீத வரம்பில் உள்ள 99% பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைய உள்ளதாக சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5, 12, 18 மற்றும் 28 என 4 வரி அடுக்குகள் உள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அல்லது குறைந்த வரி விதிக்கப்படுகிறது. அதேநேரம், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் மிக உயர்ந்த வரி அடுக்கின் கீழ் (28%) வருகின்றன. ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்குகளாக குறைக்குமாறு அமைச்சர்கள் குழுவுக்கு ஆலோசனை வழங்கி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. ஜிஎஸ்டி வரிக் கட்டமைப்பில் ‘ஸ்டாண்டர்ட்’ மற்றும் ‘மெரிட்’ என இரண்டு வகைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் 65 சதவீதம் 18% வரி வரம்பின் மூலம் கிடைக்கிறது. ஆடம்பர பொருட்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான 28% வரம்பு 11% பங்கு வகிக்கிறது. 12% வரம்பின் வருவாய் 5 சதவீதமும், குறைந்தபட்ச வரி அடுக்கான 5% வரம்பின் வருவாய் 7 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. கார்கள் உள்ளிட்ட ஆடம்பர மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்படுகிறது.

