இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாவா தீவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் ஒன்பது கிராமங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும், தொடர்ச்சியான மழையின் காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவுகள், பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன, இதனால் பல கிராமங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மக்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர். நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். கடந்த மாதம், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

