நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். இக்காலகட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கொண்ட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மஹராஷ்ட்ரா மாநிலங்களின் மழைக்காலமாகும். கடந்த 5 ஆண்டுகளாக தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைப்பொழிவின் அளவு என்றும் இல்லாத அளவிற்கு அதிகமாகவுள்ளது. 2018ம் ஆண்டு கேரளாவில் பெய்த மழை ஒட்மொத்த மாநிலத்தையே புரட்டிப் போட்டது. அனைத்து மட்டவங்களும், அனைத்து அணைகளும் நிரம்பி வெள்ளக்காடாய் காட்சியளித்தது.
வருடாவருடம் மழைப் பொழிவு அதிகமாகி விளைநிலங்கள், வீடுகள், சாலைகள், சாலைப் போக்குவரத்து என கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை மிக ஆரம்பத்திலிருந்தே அதிகமாக பெய்து வருகிறது. ஜூன், ஜூலை மாதத்தில் பெய்த மழையால் கேரளாவின் பல மாவட்டங்கள், கர்நாடகாவின் உத்திர கர்நாடகா, தக்ஷின கர்நாடகா, குடகு போன்ற பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஆகஸ்ட் மாதத்தில் மழையின் அளவு குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் கர்நாடகாவின் ஐடி நகரான பெங்களூருவும் தப்பவில்லை. ஆகஸ்ட் மாத இறுதியில் கடும் மழைப் பொழிவை எதிர்கொண்ட பெங்களூரூ நகரம் ஸ்தம்பித்தது. இதுவரை இல்லாது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிக மழைப் பொழிவை நகரம் சந்தித்திருக்கிறது என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. செப்டம்பர் மாதம் ஆரம்பம் முதலே நகரின் அநேகப் பகுதிகளிலும் பலத்த மழை, மிகவும் பலத்த மழையென நகரம் முழுவதும் கொட்டித் தீர்த்தது. இதனால் கடந்த நான்கு நட்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெல்லந்தூர், சர்ஜாப்பூர், மார்த்தஹள்ளி, ஒயிட்பீல்ஃடு போன்ற பகுதிகள் தனித் தீவுப் போல காட்சியளிக்கின்றன. கொரோனா காலம் ஓரளவுக்கு ஓய்ந்து அலுவலங்கள் வந்து பணி செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்த மீண்டும் இந்த பெருமழை தடையாக மாறியுள்ளது. அவுட்டர் ரிங் ரோடு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் பெய்த மழையால் ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் வரமுடியாத காரணத்தால் கிட்டத்தட்ட 225கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஐடி நிறுவனங்கள் கர்நாடக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
செப்டம்பர் 9ம் தேதி வரை பெங்களூரு நகருக்கு கடுமையான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடும்பாதிப்பில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர்.
