கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சஹாரா பாலைவனம், 100 மி.மீ மழை பொழிவு

அரபு நாடுகள் இயற்கை பேரிடர் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம், உலகின் அதிக வெப்பம் கொண்ட பரப்பிற்காகவும் அறியப்படுகிறது. மொராக்கோ, எகிப்து, சூடான் என 11 நாடுகளை சுற்றி அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதிகபட்சமாக 122 டிகிரி ஃபாரன்ஹீட்டும் இருக்கிறது.
உலகம் முழுக்க இருந்தும் இந்தப் பாலைவனத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கடும் வெப்பம், பெரும் நிலப்பரப்பு என பல விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதேசமயத்தில் உலகின் கொடிய விஷம் கொண்ட உயிரினங்களும் இந்த சஹாரா பாலைவனத்தில் இருக்கின்றன.
இப்படியான பாலைவனத்தில் வருடத்தில் எப்போதாவது மழை பெய்யும் என்பதைவிட தான் அங்கிருப்பதாக சொல்லிவிட்டுச் செல்லும் எனும் அளவிற்கே மழை இருக்கும். இந்நிலையில் தான் அந்த பாலைவனத்தில் திடீரென பெய்துள்ள 100 மி.மீ மழை அங்கு வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து மொராக்கோ நாடு தெரிவிக்கையில், “கடந்த 30 முதல் 50 வருடத்திற்கு முன்பு இப்படி குறைந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மழைப் பொழிவு இருந்தது. அதன்பிறகு தற்போது தான் இவ்வளவு பெரிய மழை பெய்திருக்கிறது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெருமழையின் மூலம், சஹாரா பாலைவனத்தில் உள்ள வறண்ட ஏரியான இரிக்கி ஏரியில் நீர் நிரம்பியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. உலகில் பாலைவனத்திற்காக பெரிதும் அறியப்படும் சஹாராவில் ஒரே நாளில் 100 மி.மீ. மழைப் பதிவாகியிருப்பதும், வெள்ளம் ஏற்பட்டிருப்பதும் ஆச்சரியம் கொள்ள வேண்டிய விஷயம் அல்ல, புவியின் வெப்பமயமாதல் எந்த அளவிற்கு கால நிலை மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது என்பதற்கான சாட்சி என்றே கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *