திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அடுத்தகட்டமாக பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் பெயரில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அண்ணாமலை பாஜக நிர்வாகிகளுடன் 15 நிமிடங்கள் சந்தித்து திமுக பைல்ஸ் இரண்டாவது தொகுப்பை வழங்கிய நிலையில் அதன் பிறகு சுமார் அரை மணி நேரம் ஆளுநரை தனிமையில் சந்தித்து ஆலோசித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் வரும் வெள்ளிக்கிழமையன்று ‘எண் மண் எண் மக்கள்’ என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை அண்ணாமலை தொடங்க இருக்கிறார். இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
