வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது. கொல்கத்தா, பாட்னா, லக்னோ, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் சூப்பர் ப்ளூ மூன் தெளிவாக தெரிந்தது. வானில் தென்பட்ட அரிய காட்சியை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இது சூப்பர் மூன், மற்றும் ப்ளூ மூன் ஆகிய இரண்டு நிகழ்வுகள் ஒன்றாக நிகழ்வதைக் குறிக்கிறது.
நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்தப் பாதையில், நிலவு பூமியில் இருந்து மிகத் தொலைவான புள்ளியில் இருக்கும்போது சற்று சிறியதாகத் தோன்றும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து சராசரியாக 405,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அதுவே நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது சற்றே பெரிதாகத் தெரியும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து கிட்டத்தட்ட 363,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஆனால், இந்த வித்தியாசங்கள் மிகச் சிறியவை. வெறும் கண்களால் இதைக் கண்டறிவது கடினம். ஒரு தொலைநோக்கியின் மூலம் அதைப் படம் பிடித்தால்தான் அதன் வித்தியாசத்தை நாம் காண முடியும்.
ப்ளூ மூன் என்பது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு.
இது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுவதால், ஆங்கிலத்தில் ‘ப்ளூ’, அதாவது அரிதான நிகழ்வு என்ற அர்த்தத்தில் மேற்குலகில் அழைக்கப்படுகிறது.
இதற்கான காரணம் ஆங்கில மாதங்களின் அமைப்புதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.
ஐரோப்பிய காலண்டர் அமைப்பில் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் ஆகிய ரோமானிய மன்னர்களின் பெயரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அடுத்தடுத்து 31 நாட்களுடன் இணைக்கப்பட்டதால், மாதங்களின் நாட்கணக்குகள் கூடக் குறைய மாறின. உதாரணத்துக்கு பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள். ஆனால், நிலவு பூமியைச் சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது. இதனால், ஆங்கில நாட்காட்டியின் படி, ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவுகள் வருவது அரிதானது. அதைக் குறிக்கவே இதை ‘ப்ளூ மூன்’ என்று அழைத்தனர் என்கிறார் வெங்கடேஸ்வரன். இது நாட்காட்டிகளைப் பொறுத்து மாறும்.
உதாரணத்துக்கு வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள் இருப்பதால், ப்ளூ மூன் என்னும் நிகழ்வு சாத்தியப்படாது. ஆனால் தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. சில நேரங்களில் தமிழ் மாதங்களுக்கு 32 நாட்கள்கூட இருக்கும். அதனால் தமிழ் மாத அமைப்பின்படி, ‘ப்ளூ மூன்’ சாத்தியப்படும். ஆனால் தமிழ் கலாசாரத்தில் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. முக்கியமாக, ‘ப்ளூ மூனு’க்கும் நீல வண்ணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
.

