கர்நாடகாவில் நாளை பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக எல்லை வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் பங்கீடு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய அமைப்புகளும், கன்னட ஆதரவு அமைப்புகளும் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், 175க்கு மேற்பட்ட அமைப்புகள் கன்னட விவாசயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டத்தில், இரண்டு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லக்கூடிய லாரிகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு காரணமாக தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெங்களூரு செல்லக்கூடிய தமிழ்நாடு அரசு பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
