இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க்கும் வகையில் உள்ளது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் பெரிதும் பயத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ உடன் இணைந்து 2026 முதல் 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகளை வருடத்திற்கு இரண்டு முறை நடத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை குறைத்து, தேர்வுக்கு சிறப்பாக தயாராகும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சிபிஎஸ்இ போர்டு தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. புதிய திட்டத்தின் அடிப்படையில், முதல் தேர்வு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடைபெற வாய்ப்பு உள்ளது. இரண்டாவது தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜூன் மாதத்தில் சப்ளிமென்ட்ரி அல்லது மேம்பாட்டு தேர்வு நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து, ஒரே தேர்வில் நம்பிக்கை வைக்காமல், இரண்டு வாய்ப்புகளைப் பெறுவார்கள். முதல் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வில் மேம்படுத்தலாம். இதனால், தேர்வில் தோல்வி அடைவது பற்றிய பயம் குறைந்து, சப்ளிமென்ட்ரி தேர்வுடன் சேர்ந்து போர்டு தேர்வில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். கல்வி அமைச்சகம் “சிபிஎஸ்இ குளோபல் கரிக்குலம்” என்ற புதிய பாடத்திட்டத்தை தொடங்குவதற்கான உத்தியை வழங்கியுள்ளது. இந்த திட்டம் 2026-27 கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ளது, இதன் மூலம் இந்திய கல்வி முறை உலகளாவிய தரத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த திட்டத்தை மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்படும், பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

