தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டிற்கு மழையை கொடுக்குமா அல்லது வெயிலை அதிகரிக்குமா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மழையை கொடுக்கும் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்போது உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்கு வெயிலை மட்டுமே கொடுக்கக்கூடிய ஒரு சுழற்சியாக தான் நாம் பார்க்க வேண்டும். தென்கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு கடற்கரையை நெருங்கி வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தை நோக்கி செல்ல இருப்பதால் தமிழ்நாட்டை கடற்கரை பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மேலும் வறண்ட வானிலையை உருவாக்கவே வாய்ப்புள்ளது. இந்த சுழற்சியால் கடலில் இருந்து வரும் காற்று தடைபடுவதால் வெப்பநிலை அதிகரிக்கவே வாய்ப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

