அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்.பி.ஜி சிலிண்டர்கள் ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போது, ஈரான் போருக்கு முன்பிருந்த அளவின் சுமார் 70% மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த குறையை சரிசெய்யும் வகையில், கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல், ஜவுளி, எஃகு, ரசாயனம் போன்ற தொழில்துறைகளுக்கு இந்த சிலிண்டர்கள் முன்னுரிமையுடன் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்ட அறிக்கையில், முந்தைய அறிவிப்புகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 40% ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், சில சீர்திருத்தங்களை செயல்படுத்திய மாநிலங்களுக்கு கூடுதலாக 10% ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 20% கூடுதல் ஒதுக்கீடு மூலம், மொத்த ஒதுக்கீடு 70% ஆக உயர்ந்து, தொழில்துறை செயல்பாடுகள் தடையின்றி நடைபெற உதவும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

