ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் வருகிற மே 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஜனாதிபதி பயணிக்கக்கூடிய இடங்கள் மற்றும் சன்னிதானத்தில் தங்கக்கூடிய தேவசம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல்லில் இருந்து சாலக்காயம் வரை மற்றும் சாலக்காயத்தில் இருந்து பம்பை திரிவேணி வரையிலும் சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பம்பை, மலைப்பாதை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, சாமி தரிசனத்துக்கு வரவிருக்கும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் சாமி தரிசனத்துக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில், மாதாந்திர பூஜைக்காக, வருகிற 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, 19-ம் தேதி நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

