சந்திரனில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினர். இது படிப்படியாக பல்வேறு கட்டங்களை அடைந்து, சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தது. அப்போது, சந்திரனின் மேல் பகுதியை படம்பிடித்து விண்கலம் அனுப்பியுள்ளது. இதனை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரனை சந்திரயான்-3 விண்கலம் சுற்றிவரும் வட்டப் பாதையின் உயரத்தை இரண்டாவது கட்டமாக விஞ்ஞானிகள் நேற்றிரவு 11 மணிக்கு குறைத்துள்ளனர். இதற்காக பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தின் என்ஜின் இயக்கப்பட்டது. சந்திரனின் வட்டப் பாதையில் குறைந்தபட்சம் 170 கிலோமீட்டர், அதிகபட்சம் 4,313 கிலோமீட்டர் தொலைவில் தற்போது சந்திரயான்-3 விண்கலம் சுற்றிவருகிறது.
அடுத்தகட்டமாக வட்டப் பாதையை குறைக்கும் பணிகள், நாளை மறுதினம் மதியம் 1 மணிமுதல் இரண்டு மணிக்குள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.