சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றவும், இறக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணை வந்தது. அவற்றை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகள் முடிச்சூர் பணிமனைக்கு மாற்றப்பட்டுவிட்டால், கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிவித்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகள் பொதுமக்களின் வசதிக்காக பயன்படுத்தப்பட்டதால், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அதனை தொடர்ந்து அனுமதிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதி, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் இயங்கக் கூடாது எனவும் எச்சரித்தார்.
ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகளில் பயணிகள் ஏற்றப்படும் இடமாக போரூர், சூரப்பட்டு தவிர பிற இடங்களை ஆன்லைனில் குறிப்பிடக்கூடாது என்றும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால ஏற்பாடுகளை தொடரலாம் எனவும் நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

