பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு, செய்தி தொலைக்காட்சிகள் உட்பட, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில், அப்பாவி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள கணக்குகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்திய அரசுக்கு எதிராகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் வீடியோக்களை வெளியிடும் 16 பாகிஸ்தான் பின்னணி கொண்ட யூடியூப் சேனல்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் பற்றிய தவறான தகவல்களை வீடியோக்களாக வெளியிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி சேனல்கள், விளையாட்டுத் தொடர்பான Dawn News, SAMAA TV, ARY NEWS, Geo News உள்ளிட்டவற்றின் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

