தென்மேற்கு பருவமழை தீவிரம்; கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீர், மேட்டூர் அணையில் உயரும் நீர்மட்டம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை விவசாயம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி 55 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி வரை உயர்ந்துள்ளதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குடகு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, மைசூர், மாண்டியா, ஷிவமோக்கா, ஹாசன், உத்தரகன்னடா, சிக்கமங்களூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 14ம் தேதி முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கபினி அணை தனது முழு கொள்ளளவான 84 அடியில் 83.43 அடி வரை நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124.80 அடியில், தற்போது 106 அடியை எட்டியுள்ளது. இதனால் அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 50,500 கனஅடி உபரிநீர், காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரிநீரானது, நேற்று முன்தினம் மாலை, தமிழக எல்லைக்கு வரத் தொடங்கியுள்ளது. விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11 மணி நிலவரப்படி, படிப்படியாக விநாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் முதல், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, பரிசல் இயக்குவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்ததன் காரணமாக, அருவிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 5,054 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் விநாடிக்கு 16,577 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 20,910 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் 43.83 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 46.80 அடியானது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.97 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 15.85 டிஎம்சியாக உள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, 2வது நாளாக அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் விசைப்படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதால், 2வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *