வங்கக்கடலில் நிலைபெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி நாளை (நவ.30) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இந்த புயல் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 400 கிலோ மீட்டர் மற்றும் புதுச்சேரியில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. கரைக்கு அருகில் புயலாக வலுப்பெறும் காரணமாக, புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. முந்தைய தகவலின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அது புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று, சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.