மவுரிஸோ கேட்டலன் என்பவரின் கலைப்படைப்பு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நாம் நினைப்பதுபோல் பிரம்மாண்டமானதோ அல்லது வித்தியாசமான கலைப்படைப்போ அல்ல. பின்னர் ஏன் இதற்கு இவ்வளவு பரபரப்பு என்று கேட்கிறீர்களா? இந்த கலைப்படைப்பு கோடிக்கணக்கில் விலை போனதுதான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
சாதாரண வாழைப்பழம் ஒன்று சுவரில் டேப்பால் ஒட்டப்பட்டுள்ளது. இதுதான் அந்த கலைப்படைப்பு. காமெடியன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கலைப்படைப்பு, நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் 6.24 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.52.7 கோடி) விற்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகைக்கு இதில் என்ன இருக்கிறது என பலரையும் ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த ‘காமெடியன்’ கலைப்படைப்பு முதன்முதலில் 2019ம் ஆண்டில் ஆர்ட் பாசல் மியாமியில் $120,000 என்ற விலையில் காட்சிப்படுத்தப்பட்டபோது தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. சிலர் இதை கலை மற்றும் மதிப்பீட்டிற்கான புத்திசாலித்தனமான காட்சிப் படைப்பு என்று அழைத்தாலும், மற்றவர்கள் இதை வேடிக்கையாக இருக்கிறது என்று நிராகரித்தனர்.
இந்த முறை, சீனாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஜஸ்டின் சன் இந்தக் கலைப்படைப்பை வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இதை “கலாச்சார நிகழ்வு” என்றும் அவர் அழைக்கிறார். இந்தப் படைப்பு கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றை இணைக்கிறது. மேலும் இது நவீன கலை பற்றிய விவாதங்களை பலரிடையே தூண்டும் என்றும் அவர் நம்புகிறார்.
இந்தக் கலைப்படைப்பை வாங்கியவருக்கு வெறும் வாழைப்பழம் மற்றும் அதனை ஒட்டி வைத்துள்ள டேப் மட்டும் கிடைப்பதில்லை. அதோடு சேர்த்து நம்பகத்தன்மைக்கான சான்றிதழையும் அதை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளையும் பெறுவார்.
ஆனால் இந்தக் கலைப்படைப்பு குறித்து இணையவாசிகளிடையே கலவையான கருத்து நிலவுகிறது. சிலர் இதிலுள்ள படைப்பாற்றலை பாராட்டுகின்றனர். மற்றவர்களோ வாழைப்பழத்திற்கு இவ்வளவு செலவு செய்வது கேலிக்குரியது என்று சிரிக்கிறார்கள். சமூக ஊடகங்கள் முழுவதிலும் இதற்கு கொடுக்கப்பட்ட அதிக விலை குறித்த நகைச்சுவை கருத்துகளும் மற்றும் மீம்ஸ்கள் நிறைந்துள்ளன.
இந்த வாழைப்பழம் இதற்கு முன் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்ட சிலரால் இரண்டு முறை உண்ணப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில், மியாமியில் ஒரு கலைஞர் இதை சாப்பிட்டார். அதை தன்னுடைய பெர்ஃபார்மன்ஸ் என்று அழைத்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தென் கொரியாவில் ஒரு மாணவர் அதை சாப்பிட்டு, தோலை மீண்டும் சுவரில் ஒட்டினார்.
இந்தக் கலைப்படைப்பு மேதைத்தனமாக அல்லது அபத்தமாகவோ பார்க்கப்பட்டாலும், கலை எவ்வாறு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது மற்றும் சவால் விடுகிறது என்பதற்கான அடையாளமாக ‘காமெடியன்’ படைப்பு மாறியுள்ளது. இப்போதைக்கு, இந்த வாழைப்பழம் ஒரு பழம் மட்டுமல்ல; இது ஒரு உலகளாவிய உரையாடலுக்கான தொடக்கமாகும்.