தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து 4 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ் 44 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கம் அமைக்கப்பட்டுவருகிறது. பிப்ரவரி 22 அன்று, சுரங்கத்தின் மேல்தளத்தில் ஏற்பட்ட விரிசலால் 40க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், இரண்டு இன்ஜினியர்கள் உட்பட எட்டு பேர் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் எலி வளை சுரங்க நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும், நீர்க்கசிவு, இடிபாடுகள் மற்றும் மண் போன்ற காரணிகள் மீட்புப் பணியில் சவால்களை உருவாக்கின. 30 அடி உயரம் கொண்ட சுரங்கத்தில் 25 அடி வரை நீர் நிரம்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் தண்ணீரை அகற்றி சுரங்கத்துக்குள் முன்னேறினர். நீண்ட கால கடுமையான முயற்சியின் பிறகு, 20 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் சுரங்கம் இடிந்து விழுந்த இடத்திற்கு சென்றனர். ஆனால், இடத்தில் உள்ள சகதி இறுகி கிடப்பதால், எட்டு பேரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க மோப்ப நாயை அழைத்து வர வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கான நடவடிக்கையாக, இறுகிய பகுதியை உடைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக மீட்பு படையினர் அறிவித்தனர். தற்போது 5 பேரின் உடல் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக மீட்புப் பணி நடைபெற்று வந்தும், அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை.

