திமுகவில் முன்னாள் நிர்வாகி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜாபர் சாதிக்கான அமலாக்கத்துறை வழக்கில், இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜாபர் சாதிக் ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கான விசாரணையில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாபர் சாதிக் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்ததாக கூறினார். மேலும், போதைப் பொருள் விற்பனை மூலம் பெற்ற பணத்தை இயக்குநர் அமீர் மற்றும் பிறரின் வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் வைத்துள்ளதாகவும் தகவல் வழங்கப்பட்டது. ஜாபர் சாதிக் பல்வேறு போலி நிறுவனங்களை நடத்தி, அவற்றுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணம் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாட்சிகள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இயக்குநர் அமீர் இயக்கிய “இறைவன் மிகப்பெரியவன்” என்ற திரைப்படம் ஜாபர் சாதிக் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான விசாரணையில், இயக்குநர் அமீர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

