மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டி மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அபிராமிபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.
அமலாக்கத்துறை சோதனை தொடங்கிய போது அமைச்சர் செந்தில் பாலாஜி காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். தகவலறிந்து பாதியிலேயே வீடு திரும்பிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், என்ன நோக்கத்திற்காக வந்துள்ளார்கள்? என்ன தேடுகிறார்கள்? என்பதை பார்ப்போம். முடியட்டும்.
அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நேரமாகி விட்டது. தவறாக மாறிவிடும் என்று புறப்பட்டு சென்றார். ஆனால் செய்தியாளர்கள் விடவில்லை. தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என யாராக இருந்தாலும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க தயார்.
எந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதுதொடர்பாக விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். சோதனை முடிவதற்குள் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. முடியட்டும் விரிவாக பேசுகிறேன். அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக தயார். அது சோதனையின் முடிவில் தான் தெரியவரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

