கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கி, கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் சாலைகளில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் பசுமை பந்தல் அமைக்கும் பணியை பல்வேறு மாநகராட்சிகள் தொடங்கி உள்ளன.
அந்தவகையில், கோடை வெயில் சுட்டெரிப்பதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஈ.வெ.ரா பெரியார் சாலை, ராஜா முத்தையா சாலை சந்திப்பு, அண்ணா நகர் செகண்ட் அவென்யூ ரவுண்டானா, நியூ ஆவடி சாலை மூன்றாவது அவுன்யு, கீழ்பாக்கம், சேத்துபட்டு போக்குவரத்து சிக்னல், அடையாறு எல்.பி சாலை மேற்கு அவென்யூ, திருவான்மியூர் சந்திப்பு, அடையார் சந்திப்பு, ஓ.எம்.ஆர் சந்திப்பு ஆகிய இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக 10 இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட உள்ளதாகவும், பின்னர் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.