உலக பிரபலங்கள் கலந்து கொண்ட அம்பானி வீட்டுத் திருமணம்; மும்பை நகரமே களைகட்டிய தருணம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதியரின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணம் உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதியரின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நாடே வியக்கும் வகையில் மும்பையில் கடந்த டிசம்பரில் நடந்தது. அதைத் தொடர்ந்து மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தாவுக்கும், மார்ச் 9-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோரிட்ஸ் நகரில் தொடங்கி மும்பை வரை பல்வேறு இடங்களில் திருமணத்திற்கு முந்தைய சம்பிரதாய நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் களைகட்டின. மார்ச் 6-ல் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டில் சங்கீத் நிகழ்ச்சியில் பாடகி ஷ்ரேயா கோஷல் பங்கேற்று இசை விருந்தளித்தார். 2 ஆயிரம் ஏழைக்குழந்தைகளுக்கு நிடா அம்பானி அன்னதானமும் வழங்கினார். நாடே எதிர்பார்த்திருந்த இந்தியாவின் வெகு விமரிசையான திருமணம், மும்பையில் ஜியோ உலக மையத்தில் பிரமாண்டமான முறையில் நேற்று நடந்தது. திருமணத்தை முன்னிட்டு மலர்களாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தேவலோகம் போல் ஜியோ உலக மையம் காட்சியளித்தது. மயில், குதிரை என மலர் அலங்காரங்கள் பிருந்தாவனத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை விருந்தினர்களுக்கு ஏற்படுத்தின. 150-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு இசைக்குழுவினர் வேணுகானத்தையும், கிருஷ்ண லீலா இசையையும் பரவவிட்டனர். தாத்தா திருபாய் அம்பானியின் உருவப்படத்தை ஆகாஷ் அம்பானி வணங்கியபின் திருமண சம்பிரதாயங்கள் துவங்கின. இதனைத் தொடர்ந்து பராத் எனும் திருமணத்துக்கு முந்தைய ஊர்வலம் மேளதாள இசையுடன் களை கட்டியது. மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, இயக்குனர் கரண் ஜோஹர், ரன்பீர் கபூர் போன்றோரும் நடனம் ஆடினர், பின்னர் ஷஃபா நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு தலைப்பாகை கட்டிவிடப்பட்டது. ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் தம்பதியர், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் தம்பதியர், தொழிலதிபர் லட்சுமி மிட்டல், மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவரது மனைவி அஞ்சலி வரை பல சர்வதேச பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

நாடே எதிர்பார்த்திருந்த பிரமாண்ட திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இத்துடன் மணவிழா கோலாகலங்கள் முடிந்துவிடவில்லை. இன்றும், நாளையும் மும்பையில் தொடர் கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *