தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கையாக கருதப்படுகிறது. இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 160 நிமிடங்கள் உரையாற்றினார். கூட்டத்தொடர் தொடங்கியவுடன் மதுபான ஊழல் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சி அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.
தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
1. அரசுத் துறையில் 40,000 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2. அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கடன் பெற சலுகைகள் வழங்கப்படும்.
3. கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈட்டிய விடுப்புகளை சரண் செய்யும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும்.
4. சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கான கூடுதல் குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
5. ரூ. 10 லட்சம் வரை அசையா சொத்துகளை பெண்களின் பெயரில் பதிவு செய்தால், பதிவுக்கான கட்டணத்தில் 1 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.
6. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7. ஊரக பகுதிகளில் புனரமைக்க முடியாத மக்களுக்கு 25,000 புதிய வீடுகள் கட்டி தரப்படும்.
8. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ், 5,256 வீடுகள் சீரமைக்கப்பட உள்ளன.
9.பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
10. ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பழமையான தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
11. இரு பெற்றோர்களையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
12. ரூ.1 கோடியில் ஒரு வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்.
13. 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன, இதில் சென்னை நகரில் 950, மதுரையில் 100 மற்றும் கோயம்புத்தூரில் 75 பேருந்துகள் இயக்கப்படும்.
14. ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும். விண்வெளித் தொழில்நுட்பத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
15. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
16. ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகளுக்கான காட்சிக்கூடம் உருவாக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நாவாப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் நிறுவப்படும்.
சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

