நடப்பாண்டு ஐபிஎஸ் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. 2025 ஐபில் தொடருக்கான ஏலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் சில அணிகளில் இருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டும், சில வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். குறிப்பாக ஆர்சிபி அணியில் கேப்டனாக இருந்த ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் விடுவிக்கப்பட்டார். பின்பு டெல்லி அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
அதனால் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யார் தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று(பிப்.13) காலை தங்களது கேப்டன் யார் என்பதை அறிவிக்கப்போவதாக தெரிவித்திருந்தது.
அந்த வகையில் தற்போது தங்கள் அணியின் கேப்டனை ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டரான இவரை கடந்த 2021ஆம் ஆண்டு 20 லட்சத்திற்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயரும், லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
