விண்வெளியில் டாக்கிங் செய்த 4-வது நாடாக மாறியது இந்தியா. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்,இஸ்ரோ விண்வெளியில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதற்கிடையில், சந்திரயான்-4 போன்ற பல்வேறு திட்டங்களும் இஸ்ரோவின் திட்டங்களில் அடங்கியுள்ளன. இதற்கு வழிவகுக்கும் வகையில் விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வுக்காக, இஸ்ரோ ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ) மற்றும் ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் அனுப்பியது. பல முயற்சிகளுக்குப் பிறகு, கடந்த ஜனவரி 16-ம் தேதி, விண்ணில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்தது(Docking ).இதற்கிடையில், இஸ்ரோ, விண்வெளியில் இணைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாக பிரித்து மீண்டும் இணைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது (De-Docking). நேற்று நடந்த இந்த ஆய்வில் வெற்றிகரமாக பிரித்த விடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். செயற்கைக்கோள்ளை பிரிக்கும் முயற்சி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ரஷியா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து, விண்வெளி டாக்கிங் மற்றும் டி- டாக்கிங் செய்யும் 4-வது நாடாக இந்தியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

