2023 ஆம் ஆண்டு முதல் நியூயார்க்கில் தீபாவளிக்கு பொதுவிடுமுறை – மேயர் அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி!
இந்தியர்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க இருப்பதாக மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
தீபாவளி விடுமுறை
இந்திய மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை இருக்கிறது. இந்நிலையில் பல வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நியூயார்க் நகரில் 2023 ஆம் ஆண்டு முதல் தீபாவளி திருநாளை பள்ளி விடுமுறையாக அறிவிக்க இருப்பதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் ஜூன் மாதத்தின் முதல் வியாழன் ஆண்டு விழா தினம் கொண்டாடப்படும், ஆனால் தற்போது வெளியான அறிவிப்பின் படி, அதனை பொதுப் பள்ளி காலண்டரில் தீபாவளிக்காக மாற்றிக்கொண்டனர். அதன் படி ஐந்து நாள் விடுமுறை இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் என்று நியூயார்க் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தீபாவளியை பள்ளி விடுமுறையாக மாற்றியதற்காக மேயருக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார். இது இந்திய-அமெரிக்க சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.