சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது . அவர் அமைச்சராக இருப்பதால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சாட்சியம் அளித்தவர்களுக்கு எதிராக ஒரு அழுத்தம் ஏற்படும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்டதன் மூலம், மற்றவர்கள் இதுபோன்ற நிவாரணம் பெற முனைவார்கள் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கிய பிறகு, நீங்கள் அடுத்த நாளே அமைச்சராகி விட்டீர்கள். தற்போது, நீங்கள் தமிழக அமைச்சரவையின் முக்கிய உறுப்பினராக உள்ளதால், உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கும் ஒருவருக்கு தானாகவே அழுத்தம் ஏற்படலாம். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஏஎஸ் ஓகா கேள்வி எழுப்பினார். இதற்குப் பிறகு, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால், விசாரணை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், தற்போதைய அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்களாக சிறையில் இருந்தார். அவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் அடிப்படையில் அடிப்படை உரிமையை மீறுவதாக உச்சநீதிமன்றம் தனது உத்தியில் குறிப்பிட்டுள்ளது. இதனால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

