தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மின் செலவைக் குறைப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்காக மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அரசு கட்டிடங்களில் சோலார் பேனல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பசுமை எரிசக்தி கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒப்பந்தம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஒப்பந்த நிறுவனங்கள் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தகுதிவாய்ந்த அரசு கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் முதலில் அந்த அலுவலகங்களின் தேவைக்குப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்யும். குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

