தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன், இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையின் முக்கிய நபர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட காட்சிப்படுத்துபவர்கள் மற்றும் 600 தொடக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்கள்) பங்கேற்றுள்ளன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட சொந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. ‘ஏழு சக்கரங்கள்’ என்ற கருப்பொருளில் மனித வள மேம்பாடு, பாதுகாப்பான தொழில்நுட்பம், தரவு பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 20ஆம் தேதி மாநாடு நிறைவடையும். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு 2.5 கோடி ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.இந்தியாவில் கிளவுட் மற்றும் ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்த அமேசான் நிறுவனம் 2.9 லட்சம் கோடி ரூபாய் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. “இந்தியாவின் தரவுகள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும்” என்ற பிரதமர் மோடியின் அழைப்பைத் தொடர்ந்து, தரவு மையங்கள் (Data Centers) அதிகரித்து வருகின்றன. இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக வளர்ந்து வருகிறது.2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் தரவு கட்டமைப்பு திறனை 9.2 ஜிகாவாட் அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த முதலீடு 200 பில்லியன் டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 90 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த மாநாடு இந்தியாவை உலக ஏஐ துறையில் முன்னணி நாடாக மாற்றும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

