நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக எம்.பிகள் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மக்களவை இன்று காலை கூடியதும் டெல்லியில் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்த நிலையில், சமாஜ்வாதி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பதாகைகளை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
பதாகைகள் வைத்துள்ள உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார். அதனை மீறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி ஒத்திவைக்கப்பட்டது. இதே கோரிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், பென்சன் உள்ளிட்டவற்றை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் சம்பளம், பென்சன், அலவன்ஸ் உள்ளிட்டவை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாயாகவும், தினசரி அலவன்ஸ் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களுக்கான மாதாந்திர பென்சன் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 31 ஆயிரம் ரூபாயாகவும், சர்வீஸ் அடிப்படையில் முன்னாள் எம்.பி.க்களுக்கான கூடுதல் பென்சன் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *