கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா மிகுந்த விமரிசையுடன் நடைபெறுவது வழக்கம். இன்று (பிப்.11) தைப்பூச ஜோதி தரிசன விழா சத்திய ஞான சபையில் நடைபெற்றது. காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்ற முழக்கத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர். காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ம் தேதி காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.மேலும் , 13ம் தேதி வியாழன் கிழமை 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும். தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, வடலூரில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

