அதிமுகவின் 52-ம் ஆண்டு தொடக்க விழா அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தோற்றுவித்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைவராக இருந்த அதிமுக கட்சி 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டின் போது மரணம் அடைந்த 8 குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். நிதி உதவி பெற்றவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி குழு புகைபடம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் தேர்தல் பணி குறித்து பேச உள்ளார். சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் வாரியாக கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து மறைந்த முன்னோடிகள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.