அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியாக 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், உருக்கு, இரும்பு, அலுமினியம் என அனைத்து வகையான பால் கேன்களுக்கும், அதன் பயன்பாட்டின் அடிப்படையில் இல்லாமல், ஒரே மாதிரியாக 12 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
அட்டைப் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அனைத்து வகையான சூரிய மின் குக்கர்கள் மற்றும் தீயணைப்பு நீர் தெளிப்பான்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தெளிப்பான்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
பயணிகளுக்கு ரயில்வே துறை வழங்கும் நடைமேடை டிக்கெட்டுகள், ஓய்வறைகள், பொருட்கள் வைக்கும் சேவைகள், பேட்டரியால் இயங்கும் கார் சேவைகள், ரயில்வே-க்களுக்கு இடையேயான பரிவர்த்தனை ஆகிய சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு வெளியே செயல்படும் விடுதிகளில், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்துக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 லட்சம் ரூபாய் வரையான விவகாரங்களுக்கு ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரையான வழக்குகளை உயர்நீதிமன்றத்திலும், 2 கோடி ரூபாய் வரையிலான வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.