ஒடிசா மாநிலத்தில் தங்கம் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியம்; இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல்

இந்திய வணிகம் இந்தியா இயற்க்கை சுற்றுச் சூழல் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வினோதங்கள்

கனிம வளம் அதிகமிருக்கும் மாநிலமான ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோன்ஜர், அன்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மயூர்பன்ச், மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுகள் தொடர்கின்றன. தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஒடிசா தங்கச் சுரங்கமாக மாறவுள்ளது. இங்கு மண்ணுக்கு அடியில் இருக்கும் தங்கத்தின் அளவுகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரம்பகட்ட கண்டுபிடிப்புதான். முழுமையான அளவு கிடையாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஒடிசா சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை அறிவித்திருந்தார். இதற்கிடையே, தங்கம் இருப்பது தற்போது உறுதியாகியிருப்பதால், இங்கு தங்கச் சுரங்கம் தோண்டுவதற்கான ஏலம் வெகுவிரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு இந்தியா 700 முதல் 800 மெட்ரிக் டன் என்ற அளவில் தங்கம் இறக்குமதி செய்தது. அதேநேரம், நாட்டின் உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்கள் என்ற அளவில் இருக்கிறது. இதற்கிடையே, ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் எடுக்கப்பட்டால், இந்தியாவில் உள்நாட்டு தங்க உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இறக்குமதியும் ஓரளவு குறையும்.
வெளிநாட்டு இறக்குமதி குறைந்து உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில் தங்கம் விலையும் குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கிடையே, முதல் கட்டமாக ஒடிசாவின் தியோகர் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் விடும் பணிகளை ஒடிசா அரசு துரிதப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *