குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 2வது நாளாக நேற்று மேற்கொள்ள மீட்பு பணிகளைத் தொடர்ந்து இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பாலத்தை சீரமைத்த ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 9 ஊழியர்களை கைது செய்துள்ளனர். குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள மோர்பி நகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தொங்கு பாலம் அமைந்துள்ளது. மச்சு ஆற்றின் குறுக்கே கேபிள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது.
கடந்த சில மாதங்களாக நடந்த இப்பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிந்து, 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வார விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் தொங்கு பாலத்தை காண வந்தனர். மாலை 6.30 மணி அளவில் பாலத்தில் சுமார் 500 பேர் வரை நின்றிருந்த நிலையில், திடீரென பாலம் அறுந்து விழுந்தது. பாலத்தில் நின்றிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்து மூழ்கினர். சிலர் அறுந்த பாலத்தை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியபடி கதறினர். உடனடியாக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு படையினர் படகுகள் மூலமாக ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. நேற்று முன்தினம் இரவு பலியானோர் எண்ணிக்கை 90 ஆக இருந்த நிலையில், நேற்று காலை பலி 130 ஆக அதிகரித்தது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் இரவு முழுவதும் மோர்பியில் தங்கியிருந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஐந்து குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின் ஆறு பிரிவுகள், விமானப் படையின் ஒரு குழு, ராணுவத்தின் இரண்டு குழுவினர் மற்றும் கடற்படையின் இரண்டு குழுக்கள் தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலைக்குப் பிறகு 2ம் நாள் மீட்பு பணி நிறைவடைந்தது. இதுவரை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். 3வது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் நடக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. மேலும், மாநில போலீசார் விபத்து தொடர்பாக, பாலத்தை சீரமைத்த குஜராத்தை சேர்ந்த ஒப்பந்த நிறுவன ஒரேவாவின் மேலாளர், காவலாளி, டிக்கெட் விநியோகிப்பவர் என 9 பேரை கைது செய்துள்ளனர். அஜாக்கிரதையாக பணி மேற்கொள்தல், பாதுகாப்பு அம்சங்களை புறக்கணித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குக பதிவு செய்யப்பட்டுள்ளது.
