அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கான ‘கோல்டு கார்ட்’ திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இதனை பெற 5 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் என அவர் அறிவித்திருந்தார் . அதன்படி, அமெரிக்க அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில், கோல்டு கார்ட் பெற 5 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.டிரம்ப் கூறியதாவது: “நாங்கள் ஒரு தங்க அட்டை முறையை அமல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது க்ரீன் கார்ட் போன்ற கோல்டு கார்டாகும். இந்த அட்டைக்கு 5 மில்லியன் டாலர்கள் என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் உள்ள அனைத்து சலுகைகளும் அடங்கும். மேலும், இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்காக காங்கிரஸின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான தெளிவான தகவல்களை இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

