பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நடந்த தாக்குதலின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால், பரபரப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீரர்கள், பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க சென்றனர். போட்டியில் பங்கேற்ற அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியது. பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே குறித்து தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வாக்குவாதத்தில் நடுவர் அங்கிருந்த நாற்காலிகளை கொண்டு தமிழக விராங்கனைகள் மீது வீசினார். இந்தத் தாக்குதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த சில தமிழக அரசியல் தலைவர்கள் தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் பாண்டியை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக கபடி வீராங்கனைகள் மீது ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தமிழகத்தின் விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, “பஞ்சாப் மாநிலத்தின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று இரவு, தமிழக வீராங்கனைகள் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள். வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
